×

புத்தாண்டு கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

* ஓட்டல்களில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி* அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்புதுச்சேரி :  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.  என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். புத்தாண்டு நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சட்டசபையில் நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். இதில் ஏடிஜிபி ஆனந்தமோகன், சீனியர் எஸ்பிக்கள் லோகேஸ்வரன், ராகுல் அல்வால், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், சுற்றுலாத்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் வினய்ராஜ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடும் வகையில் டிச.31ம் தேதி இரவு கடற்கரை சாலை மற்றும் பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். ஓட்டல்களில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்துள்ளோம். புத்தாண்டு கொண்டாடங்களுக்கு திட்டமிட்டுள்ள ஓட்டல்கள் வரும் 23ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துவிட்டு, ஒரு நகலை சுற்றுலாத்துறையில் அளிக்குமாறு தெரிவித்துள்ளோம். சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக டிச.30, 31, ஜன.1 ஆகிய தேதிகளில் பழைய துறைமுக வளாகம், சீகல்ஸ் உணவகம், சுண்ணாம்பாறு படகு குழாம், பேரடைஸ் பீச் ஆகிய நான்கு இடங்களில் தனியார் பங்களிப்புடன் தேசிய அளவில் புகழ் பெற்ற 45 இசைக்குழுக்கள் கலந்து கொள்ளும் டிஜே இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  புத்தாண்டு கொண்டாட வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இதற்காக பல இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். சுற்றுலா பயணிகள் எந்த தொந்தரவும் இல்லாமல் மகிழ்ச்சியோடு வந்து புத்தாண்டை கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியோடு ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா துறை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.சங்கராபரணி நதி திருவிழா 25ம் தேதி நடக்கிறதுஅமைச்சர் லட்சுமிநாராயணன் மேலும் கூறுகையில், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி சுற்றுலா துறை, இந்து சமய நிறுவனங்கள் ஆணையம் மற்றும் பிற அரசு துறைகள் இணைந்து வருகிற 25ம் தேதி மாலை 5.30 மணிக்கு வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கங்கை வராக நதீஸ்வரர் கோயில் நதிக்கரையில் சங்கராபரணி நதி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இவ்விழாவில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலையில் 26ம் தேதி நதி திருவிழா நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும், ஆண்டுதோறும் சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் அகில உலக யோகா திருவிழா வருகிற 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பங்கேற்பதற்காக அனுமதி கேட்டுள்ளோம். என்றார்….

The post புத்தாண்டு கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : New Year ,Minister ,Lakshminarayanan ,Puducherry ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்